Sunday, February 6, 2011

காரை மைந்தன் கவிதைகள்


மறந்தே போனது

எது என் முகம்
எது என் முகவரி
இரவல் வாழ்க்கையும்
முகமூடிகளாய்
               
                 மறந்தே போனது
                 என் முகமும்
                 என் முகவரியும்
                 எனக்கு

இந்தியானாய் ஒரு முகமூடி
திராவிடனாய் ஒரு முகமூடி
தமிழன் என் முகம்
மூடி மூடி

                 மறந்தே போனது
                 என் முகமும்
                 என் முகவரியும்
                 எனக்கு

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால்
சன் டிவியும்
சன் மியூசிக்குமாய்
ஏய் வியூவர்ஸ் குட் மார்னிங்
என்று அழைக்கும்
நிரஞ்சனாக்களும்
பிரஜன்களுமாய்

                 மறந்தே போனது
                 என் பண்பும்
                 என் பேச்சும்
                 எனக்கு

47 A அல்லது 47 B
பேருந்துக்கள் தேடியேறி
“டிக்கட் டிக்கட்” என்னும்
நடத்துனர்
சேன்ஜ்ஆ எடுத்து வச்சிக்குங்க
என்ற ஆணையில்

                  தொலைந்தே போனது
                  என் மொழியும் 
                  என் இனமும் 
                  எனக்கு

பிறந்த நாட்களில்
மெழுகுவர்த்தி அணைத்து
திருமணத்தில்
சமஸ்கிருதம் ஓதி
இராமாயணம் மகாபாரதம் படித்து

                   மறந்தே போனது
                   என் வேரும்
                   என் வரலாறும்
                   எனக்கு
                  
ஈழவிடுதலைக்கு என் வேட்கை
தீவிரவாதமாகவும்
காஸ்மீருக்கு இந்தியப் போரை ஆதரிப்பது
என் கடமையாகவும்

                    திரிந்தே போனது
                    என் தேசமும்
                    என் தேசியமும்
                    எனக்கு.
     


நம்புங்கள்.

ஈழம் பிறக்கும்
நாள்முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்

ஈழம் பிறக்கும் நாள்
“ஈழம் பிறந்தது”
என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
நம்புங்கள்.

சிரிப்பு

லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு
ஐந்து கோடி சொத்துதான் என்னிடம் இருப்பு
நல்லாச் சொன்னீங்க
இவ்வாண்டிற்கு இதுதானுங்க பெரும் சிரிப்பு
திரைக்கதை எழுதித்தான் நீங்க பிழச்சீங்க
அரசியலிலும் இப்படி வசனம் பேசியே நடிச்சீங்க
தெரியாமலயா அழைச்சோங்க
உங்கள நாங்க கலைஞருன்னு


---எல்லை----

ஒரு கண்ணத்தில் அறைந்தவனிடம்
மறு கண்ணத்தைக் காட்டு
என்ற இயேசு தான்
தன் தந்தையின் இல்லத்தில்
கடைகள் வைத்த வரை
சாட்டையால் அடித்து விரட்டினார்

பொறுத்தலுக்கும் சகித்தலுக்கும்
எவருக்கும்
ஒரு எல்லை உண்டு
என்பதனால் தானே.


வீழ்வது நாமல்ல

அலைகளிடமிருந்தும்
கற்போம்
களைந்த பின்பும்
வளரும்
களைகளிடமிருந்தும்
கற்போம்

மாண்டாலும்
பூமியைப் பிளந்து
பலவாய் வளரும்
வாழைகளைப் போல்

நாம்
ஒருவர் விழ
ஓராயிரமாய் எழவோம்.


எழுதுகோல்

எழுதுகோல்
மனங்களை உழுது
மனித சமத்துவம்
காணும்
ஏர்முனை.

மலைகள்

என்
மண்ணைக் காக்க
மலைத் தொடர்கள்
சுவராய் நின்றும்
இந்த
மலைவழிதான்
களவு போனது
என்
மண்ணும் மரபும்.


உன் நிம்மதிக்குள்

நிம்மத்யாய்த் தூங்கு
உன் நிம்மதிக்குள்
நானில்லை

வராத உறக்கத்தை
விடியாத இரவுகளுள்
தேடித் தேடி
புரளும் என்னுள்
இன்னும் நீ

நிம்மத்யாய்த் தூங்கு
உன் நிம்மதிக்குள்
நானில்லை.


எதைச் சொல்ல

எதைச்சொல்ல உன் மனதுள் நான் விதையாய் விழ
எதைச்சொல்ல என் உயிர் அதில் எருவாய் இட
எதைச்சொல்ல என் மனம் அங்கு மழையாய் வர
எதைச்சொல்ல என் மூச்சை அங்குக் காற்றாய் விட
விடை சொல்லு காதல் விதை முளை விட.



புது வருடம் 2011
ஒரு வருடம் துக்கம் கழித்து
புது வருடம் கொண்டாட
இழந்ததென்ன ஒரு உயிரோ?
ஒரு லட்சம் தமிழர் இறந்த ஓலம்,
தமிழீழ நாடு இழந்த சோகம்
மறைந்து போகுமோ???
மண்ணை மீட்டு புலிக்கொடி பறக்கும்
தமிழனுக்கு அன்று புத்தாண்டு பிறக்கும்

கடந்தது 2010

கடந்தது நம்மை 2010
கடந்தோமா நாம் 2010 ?

அம்மா

தோற்றுப்போனேன் காற்றுடன்.
தன்னோடு கரைத்துக்கொண்டது
காற்று
உன் உயிரை !

மண்ணில் மண்டியிட்டு
மன்றாடினேன்.
பிடுங்கி என்னை
புதைத்தார்கள் உன்னை !
மண்ணும் வென்றது.

என்னோடு கலந்து
நரம்போடு பிணைந்து
உணர்வோடு உருகி
நினைவோடு நிறைந்து
விழித்தாலும் உறங்கினாலும்
என் கண்ணுள் பதிந்துப் போனவளே
என் அம்மா !
காற்றென்ன
மண் என்ன
மழை என்ன
மலை என்ன
யார் வெல்வார்
யார் பிரிப்பார்
என்னுள் உறைந்த
உன்னை.

No comments:

Post a Comment