இயற்கை
ஆண்டுக்கு ஒரு முறை இளையுதிர்காலம்
பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்
விடுதலைப் புலிகளுக்கு.
* * *
இறுள்வதும் விடிவதும்
தினம் நிகழும்
ஈழவிடுதலைப் போரிலும்
சில இரவுகள் இருக்கும்.
தீபாவளி தமிழன்
மரண வாடைக் கண்டால்
நாய்கள்கூட ஓலமிடும்
தமிழா
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
உன் இனம்
ஈழத்தில்
கொத்து கொத்தாய்
பூண்டோடு
கொல்லப்பட்டு கொண்டிருந்த போது.
துக்கம் தீரவில்லை
மிச்சம் பிழைத்த தமிழன்
சிங்கள சத்தான்
வாயிலிருந்து
இன்னும் மீளவில்லை.
தீபாவளி, ரம்சான், ஈஸ்டர்
பண்டிகைகளுக்கு
தமிழகத்தில் குறைவில்லை.
அரசு தீவிரவாதத்தில்
வெடித்து சிதறிய
தமிழன் உடல்கள்
புதைப்பதற்கு
ஈழத்தில் யாருமில்லை.
பட்டாசு ஆயிரம் வகை
இனிப்பு நூறு வகை
வெடிக்கவும் உண்ணவும்
புத்தாடையில் தீபாவளிக்கு
ஜொலிக்கவும் தயாராய்
ஆறு கோடி தமிழனின் தமிழகம்.
இழவுக்கு இழவு
குடித்து வெடித்து ஆடி
பழகிப்போன தமிழனிடம்
வேறென்ன எதிர்பார்ப்போம்
ஆநாம்.
நான் பேச நினைப்பதெல்லாம் !
வேறுபடாமல்
ஒன்றாய்
இருப்பதுதான்
காதல்
என்றிருந்தேன்
வேறுபாடுகளுடன்
ஒன்றாய்
இருப்பதுதான்
காதல் என்று
புரிந்துகொள்ளும்
வரை.
இல் அறம்
18 வருடங்கள்
பல நூறு விடயங்கள்
எதிலும்
என்னோடு ஒத்துப்போகவில்லை
நீ
இன்று ஒத்துப்போய் இருக்கிறாய்
நீதிமன்றத்தில்
நான் தாக்கல் செய்த
மனமுறிவு
மனு மீது.
நாட்குறிப்புப் பக்கங்கள்
வெள்ளைத் தாளாய் இருந்து போகட்டும்
நல்ல கவிதை அது
என் உள்ளச் சோகம் கொட்டி
ஏன் காகிதமும் கணக்க வேண்டும்.
வலி
பிரிந்து
உனை நினைத்து
வாழும் வலி பெரியது
பொறுத்துக் கொள்வேன்
இணைந்து
உன் கள்ளி முள்
சொற்கள்
எனை சிதைக்கும் வலி
எதனினும் பெரியது.
தத்துவ அனுபவம்
படித்து கொண்டிருந்தேன்
இருண்டு போனதாய்
தெரியவில்லை அறை
நுழைந்தவர்
விளக்கிடும் வரை.
குப்பை
வெளியே கொட்டிய
குப்பையில்
இருக்கிறது
உள்ளே உள்ள சுத்தம்
எரிந்த
குப்பைக்குள்ளும்
வாழ்க்கை இருக்கிறது
குப்பை அள்ளி
பிழைப்பவர்களுக்கு.
பன்றிக்கு வாய் முளைத்தால்
பன்றிக்கு
வாய் முளைத்தால்
மலம் தின்பதைத்தான்
மல்லாக்கு படுத்துப் பேசும்
சாலவத்தில் நனைவதைத்தான்
குற்றாள குளியல் என்று கூறும்
பீத்திண்ணும் வாயால்
பன்றிகள் வேறென்ன பேசும்.
ஒரு தொலை நோக்கு
மரணத்தை வெல்லாமல்
மானுடம் ஓய்வதற் கில்லை
எந்த மறைகள் எதிர்த்தாலும்
இந்த தேடல் முடிவதற்கில்லை
மரண ஓலங்கள் நில்லாது
அறிவியல் இன்னும் வெல்லவில்லை
மாரடித்தழும் உறவுகள் ஓலம்
ஐயகோ இன்னும் கேட்பதற்கில்லை
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
மண்ணில் இடமில்லை என்றார்
மார்க்கங்கள் முறையாய் தேடவில்லை
கிரகங்கள் குடியேற்றம் காணவில்லை
மீதம் எட்டும் போதாதெனில்
பால்வீதிகள் பல உண்டு
தேவைகளே திறவு கோல்
காலம் வரும் மரணத்திற்கு மரணம் வரும்.
________________________________________________________________
வைரமுத்துக்கு ஆலோசனை
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ் தாய்தான் என்ற வைரமுத்துவின் ஆதங்கம் படித்தேன். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் செத்தவர்களைக் கூட சேர்த்துக் கொள்வார்களா ? வைரமுத்துவுக்கும் கலைஞருக்கும் எதற்கு ஒரே ஒரு குறை, தமிழீழத்தில் நாம் கொன்று குவித்த இலட்சம் தமிழர் பிணங்களைப் பிரட்டித் தேடினால் செத்துப்போன தமிழ்த்தாய் பிணத்தைத் தேடி எடுத்து வந்துவிடலாம்.
________________________________________________காரை மைந்தன் படைத்துள்ள நூல்கள்
விடியாமல் முடியாது ( கவிதை )
விழித்தெழு விடியும் ( கவிதை )
உயிரின் முகங்கள் ( கவிதை )
ஊமையாகும் உணர்வுகள் (கவிதை )
உயிர்த்து வா தமிழா ( கட்டுரை )
ஆளுமை வளர்ச்சி (Personality Development)(உளவியல்)
வெளிவர இருக்கும் நூல்கள்
நூல்கள் திறனாய்வுத் தொகுப்பு
கட்டுரைத் தொகுப்பு
கவிதைத் தொகுப்பு
Personality Counseling
Personality Development
நடத்தி வரும் இயக்கங்கள் :
தமிழர் விழுதுகள் பேரவை - இளைஞர்களிடையே
ஆளுமை வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி மேல் ஆர்வம் வளர்க்க நடத்தப்படும் இயக்கம்.
காரைமகள் அறக்கட்டளை - நல்ல இலக்கியங்கள் ஊக்குவித்து பரிசளிக்கவும் இளைஞர்களிடையே படைப்புத் திறனை வளர்க்கவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதும்.
நடத்தி வரும் இதழ் :
தமிழர் தொலைநோக்கு ( காலண்டிதழ் - தனிச்சுற்று )